தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு - கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம்!
ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி திமுக சமீபகாலமாக குற்றம் சாட்டி வந்தது. இதையடுத்து துணைவேந்தர்கள் நியமனம் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களையும் சட்டமாக்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரம்புகளை மீறும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டிருக்க வேண்டும்.
ஆளுநர் மசோதாவை அங்கீகரிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. நீதிமன்றம் அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்தால், சட்டமன்றமும் நாடாளுமன்றமும் எதற்கு? அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு. அதற்கு நாடாளுமன்றத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்வது சரியல்ல, நீதித்துறை வரம்பு மீறின செயலை செய்கிறது" என்று பேசியுள்ளார்.