“பாஜக சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு...ஆனால்...” - ட்விஸ்ட் வைத்த ராகுல் காந்தி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க கேட்டுள்ளதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். இந்த சூழலில் மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நாட்டில் இதுவரை மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணித் தரப்பில் இம்முறை வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரலாற்றை தொடரவும், மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி, பாஜகவின் மக்களவைத் தலைவர் வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக கோரியுள்ளார். மேலும் இதுகுறித்து ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து சபாநாயகர் பதவிக்கு ஆதரவு அளிக்குமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் கூறியது. ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
மக்களவைத் தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியும் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதுடன், துணைத் தலைவர் பதவியை கோரியுள்ளது.