சென்னை கிண்டி, தஞ்சாவூரில் ‘குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை’! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
03:09 PM Jun 28, 2024 IST
|
Web Editor
Advertisement
சென்னை கிண்டியிலும், தஞ்சாவூரிலும் "குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை” ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
Advertisement
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மொத்தம் 110 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் சில:
- கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை - கிண்டி வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இராசா மிராசுதார் மருத்துவமனையிலும் "குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை” ரூபாய் 250.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மருத்துவமனை ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ், 6 மண்டல ஆராய்ச்சி மையங்கள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களை பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.27 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.
- தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 'சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல்‘ ஆகிய இரண்டு புதிய சிறப்புத் துறைகள் உருவாக்கப்படும். மேலும், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு சேவைகளை மேம்படுத்த 5 அவசரகால மருத்துவ அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
- பிறப்புற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகளை கண்டறிய முழுமையான உடற் பரிசோதனைகள் (Head to Toe Examination) அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே செய்யப்பட்டு, பிரத்யேக சுகாதார அட்டைகள் (Child Health Card) வழங்கப்படும். மேலும், தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலத்தை கண்காணிக்க சிறப்பு மையங்கள் (Well Baby Clinic) நடத்தப்படும் .
- சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து விடுவிக்கப்படும் குறைப் பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடித் திட்டம் ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
- சேலம் மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கருவுறாமை சிகிச்சைக்கான முதற்கட்ட செயற்கை கருத்தரிப்பு மையங்கள் (Level-1 Assisted Reproductive Therapy-ART) நிறுவப்படும்.
- நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளில் நோய்க் கட்டுப்பாட்டின்மையால் வரக்கூடிய விழித்திரை மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனைகள் ரூபாய் 3.19 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.
- நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்பினைத் தடுப்பதற்கான "ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம்” ரூபாய் 26.62 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
- மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
Next Article