சுதாகர் ரெட்டி மறைவு - செல்வப்பெருந்தகை இரங்கல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றி உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாவலராக செயல்பட்ட தோழர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவு செய்தி துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது.
தமது இளமைப் பருவம் முதல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அகில இந்திய தொழிற்சங்கம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பை வகித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி உலக கம்யூனிஸ்ட் பேரியக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களித்தவர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்புற பணியாற்றி பொதுவுடமை கருத்துக்களை வலிமையோடு பறைசாற்றியவர் சுதாகர் ரெட்டி
தொழிலாளர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களை திரட்டி உரிமைக்குரல் எழுப்பிய எஸ். சுதாகர் ரெட்டி மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.