கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - காவல்துறை விசாரணை!
கோவை, மதுக்கரை அருகே உள்ள திருமலையம் பாளையத்தில் நேரு பொறியியல் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் வெளிமாவட்டம், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவில் மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதியில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின் வயிற்று வலி ஏற்பட்டதாக மாணவர்கள் கூறி உள்ளனர். மேலும் உணவில் பூச்சிகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்களான தர்மபுரியைச் சேர்ந்த நிதீஷ்குமார், திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பேர் என 5 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு, விடுதியில் வழங்கப்பட்ட தேநீரிலும் பூச்சிகள் காணப்பட்டதாக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனிடையே ஒரு சில மாணவர்கள் விடுதி முன் சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர். தற்பொழுது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கே.ஜி சாவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.