For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் - தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!

09:42 PM Jun 29, 2024 IST | Web Editor
இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள்   தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை
Advertisement

ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 இஸ்லாமிய மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இலங்கை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது.

Advertisement

இலங்கை திருக்கோணமலை பகுதியிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசின் கல்வித்துறையால் நடத்தப்படும் ஏ/எல் உயர்கல்வித் தேர்வுகளை எழுதியுள்ளனர். தேர்வு எழுதுகையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து அவர்களின் காதுகள் மறைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கல்லூரியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முழுதாக மறைக்கும் ஹிஜாபினைப் பயன்படுத்தாமல், மெலிதான வெள்ளைத் துணிகளைத் தலையில் அணிந்து மாணவிகள் அறைக் கண்காணிப்பாளர்களால் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மாணவிகள் புளூடூத் சாதனங்களை மறைத்து வைத்து காதுகளில் அணிந்து தேர்வெழுதியிருக்கலாம் என்று தேர்வாணையம் தீர்மானித்துள்ளது.

அதன் முடிவாக, ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 மாணவிகளின் தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால், மற்ற மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த மே 31 அன்று வெளியாகியுள்ளது. இதனால், தங்களது உயர்கல்வி வாய்ப்புப் பறிபோகும் என்று இஸ்லாமிய மாணவிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பலரும் கல்வித்துறை மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்லாமிய மாணவிகள் மதத்தின் பேரில் பல்வேறு தடைகளை மீறி படிக்க வருவதாகவும், ஆனால், தற்போது ‘இஸ்லாம் எதிர்ப்பு’ கொள்கையால் இத்தகையப் பாகுபாட்டை எதிர்கொள்வதாகவும் வருத்தம் தெரிவித்தனர். சிங்கள பௌத்த பெரும்பான்மை மட்டுமின்றி இலங்கை வாழ் தமிழ் மக்களும் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்டுள்ளதால் இத்தகைய தண்டனையை மாணவிகள் அனுபவித்து வருகின்றனர் என்றும் இலங்கை கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுடன் பேசிய தேர்வுத்துறை ஆணையர் அமித் ஜெயசுந்தர பேசுகையில், “தேர்வு அறைக்குள் நுழையும் முன்பிருந்து, தேர்வு எழுதி முடிக்கும் வரை காதுகள் மூடப்படாமல் இருக்க வேண்டும் என்ற விதிகளில் எந்த நிபந்தனையும் இல்லை. இந்த விதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இஸ்லாம் மதக்குழுக்களிடம் ஆலோசனை செய்த பிறகே இலங்கை நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதற்குக் காத்திருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று சரியானத் தகவல் இன்னும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. திருகோணமலையில் இதற்கு முன்னரும் இதே போன்ற உடை சார்ந்த பிரச்னையை இஸ்லாம் மாணவிகள் அனுபவித்துள்ளதாகவும், இலங்கையில் வேறு எந்தத் தேர்வு மையத்திலும் இவ்வாறான பிரச்னைகள் எழுப்பப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டிலும், ஆசிரியர் தேர்வு எழுதிய இஸ்லாமியப் பெண்கள் 13 பேர் இதே போன்ற பிரச்னைகளை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

Tags :
Advertisement