மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனிடையே அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் டெல்லியிருந்து நேற்று இரவு சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இன்று விசாரணையை தொடங்க உள்ளனர். இதையடுத்து வழக்கு தொடர்பாக எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.