”ஆணவபடுகொலைக்கு எதிராக கடுமையான சட்டம் தேவை”- முதல்வருடனான சந்திப்பிற்கு பின் வைகோ பேட்டி!
மதிமுக பொது செயலாளர் வைகோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முதலமைச்சர் உடல்நலம் குறித்தும், முப்பெரும் விழா குறித்தும் விசாரித்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலைச்சரிடம் கவின், ஆவணப்படுகொலையை சுட்டி காட்டி, ஆணவக் கொலைகள் என்பது காவல்துறைய உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும், இன்னும் அதுகுறித்து கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனத் வலிறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் அவர், ”மதிமுகவை பொறுத்தவரை, பாஜகவும் ஆர்எஸ்எஸும் இந்துத்துவா சக்திகளும் தந்தை பெரியார், அண்ணா மண்ணில் எப்படியாவது அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்து கால் பதிக்க முற்படுகிறார்கள், இதை தடுக்க வேண்டியது திராவிட இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் கடமை. இதுவே கடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மதிமுக கூட்டணி வைத்ததற்கான அடிப்படை காரணம். இந்துத்துவ சக்திகளும் பிஜேபியும் தமிழ்நாட்டில் நுழைய விடமாட்டேன் என்றும் தவிடுபொடியாக ஆக்குவோம் என்று சொல்லி தான் எங்கள் கட்சியை திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டோம். அதே நிலைப்பாடுதான் இன்றும் தொடர்கிறது நாளையும் தொடரும்.
நேற்று முதலமைச்சரை தேமுதிகவினர் வந்து பார்த்தவுடன் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் அவர்கள் பிஜேபியோடும் அதிமுகவோடும் பேச்சு ஆரம்பித்துவிட்டார்கள் என்று எழுதுகிறார்கள். இப்படி அபாண்டமான செய்திகளை ஒரு அரசியல் இயக்கத்தை குறிவைத்து தாக்குவதை மூல நோக்கமாக வைத்திருக்கிறீர்களே ? நாங்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தோம்?” என வினவினார்.
மேலும் அவர், ”நான் தொடர்ந்து எல்லா கூட்டங்களிலும், பாஜகவின் இந்துத்துவா சக்திகளையும் மிக கடுமையாக தமிழ்நாட்டில் வேறு எவரும் விமர்சிக்காத வகையில் விமர்சித்து வருகிறேன். அந்த நிலைப்பாட்டில் என்றைக்கும் மாறுதல் வராது, எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்தைக் கொண்டும் இந்துத்துவா சக்திகள் – பாஜகவுடன் மதிமுக இம்மியளவும் உடன்பாடோ தொடர்பு வைத்துக் கொள்ளாது. ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்தது உடல்நலம் குறித்து விசாரிக்கத்தான், அதற்கு மேலே அதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் நான் கொடுக்க விரும்பவில்லை. பாஜகவினர் அவர்களை சந்திக்க ஓபிஎஸ்'சுக்கு நேரம் கொடுக்கவில்லை ஆகவே வேறு வழியில்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி இருக்கிறார்” என வைகோ கூறினார்