"தனியார் குழுக்கள் கோயில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!
கோவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்குதல், மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அங்கு இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நிழல் தரும் கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைத்தல் ஆகிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
மேலும், இப்பகுதியில் நடைபெற்று வரும் மின் தூக்கி அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஆசியாவிலேயே மிக உயரமான, 184 அடி உயரம் மற்றும் 80 - க்கு 60 சுற்றளவு கொண்ட முருகர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தை அமைச்சர்
மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கார்த்திக், திருக்கோவில் அறங்காவலர் குழுவினர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
மருதமலைக்கு சொந்தமான இடங்களில் இருக்க கூடிய உயர் நிலைப் பள்ளிகள் இங்கு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த கல்லூரிக்கான கட்டுமான மதிப்பீடு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மருதமலை கோவிலின் சார்பில் கல்விச் சோலை அமைப்பதற்கான திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பக்தர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கே இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், தற்போது பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதால் அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருதமலையை சுற்றிலும் கழிவுகள் கொட்டப்படுவதால் வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
அறநிலையத் துறை நிச்சயமாக தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும், வன விலங்குகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தும் என்றும், மருதமலை சுற்றி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பெருந்திட்ட மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
கரட்டு மேடு முருகன் கோவிலில் தனியார் குழுக்கள் கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூலிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில்,
இனி எந்த கோவிலிலும் தனியார் அமைப்புகள் கோவிலின் பெயரையோ அல்லது கட்சிகளின் பெயர்களைக் கூறி நிதி வசூல் செய்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.