“வாக்குகள் சிதறாமல் வியூகம்...கூட்டணியில் பல கட்சிகள் சேரும்” - இபிஎஸ் பேச்சு!
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று(மே.03)
பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, “நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன திட்டத்தை கொண்டு வந்தார், எதுமே இல்லை. உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் முதலமைச்சர் செய்த சாதனை வேறு எந்த சாதனையும் பார்க்க முடியவில்லை. 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு, மன்னராட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னைப் பார்த்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் கூட்டணி வைத்தீர்கள்? என்று கேட்கிறார். இது எங்களுடைய கட்சி. ஒத்த கருத்துடன் வாக்குகள் சிதறாமல் வெற்றி பெறப்போகும் வெற்றிக் கூட்டணி. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?. எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர உள்ளது. அப்போது அவர் அதிமுக எவ்வளவு பலம் உள்ளது என்று உணருவார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக உடனான கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று கூறினார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்று சொன்னார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதறுகிறார். அவர் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று எண்ணினார். அது கானல் நீராகிவிட்டது. நாங்க கூட்டணி வைத்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் சேரும். ஏனென்றால் வாக்குகள் சிதறாமல் எதிரிகளை வீழ்த்த நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம்.
1999ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? அப்போது பாஜக நல்ல கட்சி. இன்றைக்கு அதிமுக கூட்டணி வைத்தால் சரி இல்லையென சொல்வது எந்த விதத்தில் சரி? நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பீர்கள். உங்களுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. 5 ஆண்டு காலம் அந்த கூட்டணிக்கு பிறகு பதவி சுகத்தை திமுக அனுபவித்தது. அதன் பிறகு குரங்கு போல் காங்கிரஸ் உடன் இணைந்த கட்சி தான் திமுக. அதிமுக-வை மிரட்டி பணிய வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். அவர் இது மக்களவை தேர்தல் அல்ல சட்டமன்ற தேர்தல் என்பதை அவர் உணர வேண்டும். அமலாக்கத்துறையும் வருமானத்துறையும் திமுகவினரை கண்காணித்து வருகிறது. அதனால் பயத்தில் எங்களை மிரட்டியதாக பேசுகிறார்கள். அதிமுகவுக்கு மிரட்டல் இல்லை, மகிழ்ச்சியோடு கூட்டணி அமைத்துள்ளோம்”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.