நாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு - 12 வயது சிறுமி காயம்!
கன்னியாகுமரியில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வேலைக்குச் செல்வோர், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை வழக்கம்போல் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயில் நாகர்கோவில் டவுன் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலில் பயணம் செய்த 12 வயது சிறுமி காயமடைந்தார். இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக ரயில் பயணிகள் இச்சம்பவம் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கல்வீச்சில் காயமடைந்த சிறுமி கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணத்தை சேர்ந்தவர் என்றும், அவர் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் ரயில் மீது கல்வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 18 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவர்கள் ரயில் மீது கல் வீசியதை ஒப்புக்கொண்டனர்.
சிறுவர்கள் ஈத்தமொழி, பீச்ரோடு, வெட்டூர்ணிமடம் மற்றும் பள்ளிவிளை பகுதிகைளை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் 15 வயதுடைய 2 பேர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் எச்சரித்துவிட்டு அனுப்பினர்.