சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? #Telangana அரசு முக்கிய அறிவிப்பு!
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநில அரசு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கவுள்ளதாக அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை நவம்பர் 6-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியாகக் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், இந்தப் பணியில் 80,000 அரசு ஊழியர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு அதற்கென தகுந்த பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தையும் உள்ளடக்கிய முழுமையான கணக்கெடுப்பு வருகிற நவம்பரில் தொடங்கி முடிக்கப்படும். சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் பொதுத் தளத்தில் வைக்கப்படும்” என்று அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்தார்.