Stand-Up காமெடி சர்ச்சை - குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மகாராஷ்டிராவின் பிரபல Stand-Up காமெடி நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தான் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சனம் செய்தார். இதனால் கொதித்த ஷிண்டே ஆதரவாளர்கள் நிகழ்ச்சி நடத்த இடத்தை சூறையாடினர். மேலும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கட்சியை சேர்ந்த எம்எல்ஏ முர்ஜி படேல், குணால் கம்ராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் குணால் கம்ரா மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கமான முன்ஜாமீன் பெறும் வரை, கடந்த 2021-ல் தனது வசிப்பிடத்தை விழுப்புரம் மாவட்டத்துக்கு மாற்றிவிட்டதாகவும், தனக்கு மாநிலங்களுக்கு இடையேயான முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை முன்பு விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், குணால் கம்ராவுக்கு இன்று(ஏப்ரல்.07) வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இது தொடர்பான மனு இன்று மீண்டும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மும்பை காவல்துறைக்கு அனுப்பிய தனிப்பட்ட நோட்டீஸை சமர்ப்பித்தார். மேலும் அவர் “மூன்று வழக்குப்பதிவு தொடரப்பட்டுள்ளது. குணால் கம்ரா மீதான விரோத போக்கு தொடர்கிறது, கட்சியினராலும் அமைச்சர்களாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. மும்பை காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை தொந்தரவு செய்கின்றனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது” என்று கூறினார்.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, மும்பை காவல்துறைக்கு தனிப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்பதை சரிபார்க்க உத்தரவிட்டதோடு வழக்குப் பட்டியலில் மும்பை காவல்துறையின் பெயரை சேர்க்க உத்தரவிட்டார். மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.