காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை - காவல்துறை தீவிர விசாரணை!
ஸ்ரீபெரும்புத்தூர் அருகே செல்போன் கடையில் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை! கைரேகை நிபுணர்களுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. இங்கு ஸ்மார்ட் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு பிரேம் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது கடையின் உள்ளே இருந்த விலை உயர்ந்த செல்போன்களாக சாம்சங், விவோ, ஓப்போ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளையானது தெரியவந்தது.
இது குறித்து பிரேம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்க்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் 7 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளையானது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.