PresidentElection | இலங்கை மக்கள் கொடுத்த Twist! முதன்முறையாக இடதுசாரி ஆட்சி… அதிபராகும் புரட்சியாளர் அநுர குமார திசாநாயக்க!
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 17,32,386 (41.71%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரது வாழ்க்கை குறித்து காணலாம்.
திசாநாயக்க முதியன்சேலாகே அநுர குமார திசாநாயக்க 1968-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி, தாயார் ஒரு இல்லத்தரசி. மிகவும் எளிமையான குடும்பத்தில் இவர் பிறந்தார். இவர் தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றார்.
கல்லூரியிலிருந்து சிறப்பாக படித்த அவர் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் முதல் மாணவராக தேர்வானார். பள்ளிப் பருவத்தில் இருந்து ஜேவிபியில் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட திஸாநாயக்க, 1987ல் ஜேவிபியில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, 1987-1989 கட்சி போராட்டங்களில் ஈடுபட்டார். 1987 முதல் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.1995 இல், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார். அதே ஆண்டு ஜேவிபியின் மத்திய செயற்குழுவில் நியமிக்கப்பட்டார். இவர் 1998 இல் ஜேவிபியின் பொலிட்பீரோவுக்கு நியமிக்கப்பட்டார்.
2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஜேவிபி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) ஒரு அங்கமாகப் போட்டியிட்டது. இதில் அவர்கள் 39 இடங்களை கைப்பற்றியது. திஸாநாயக்க, குருநாகல் மாவட்டத்திலிருந்து சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் 2005 வரை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றினார். 2 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்ற கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் ஜேவிபியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படும் அநுர குமார திசாநாயக்க கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தற்போதைய தலைவரும் ஆவார். 2019 இல் முன்னாள் அதிபர் வேட்பாளரான இவர் மீண்டும் 2024 இலங்கை அதிபர் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார். அங்கே பணத்தின் மதிப்பு சரிந்தது, 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு போன்ற விஷயங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார். இதனால் அவர் மக்கள் இடையே புரட்சி நாயகனாக பார்க்கப்பட்டார். 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார். தற்போது அநுர குமார திசாநாயக்க 17,32,386 (41.71%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 13,02,082 (31.35%), ரணில் விக்கிரமசிங்க 7,01,820 (16.9%) வாக்குகள் பெற்றுள்ளனர்