உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஒப்பந்தம் செய்யாதது ஏன்? - இபிஎஸ் கேள்வி
சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதையும் படியுங்கள் ; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"20 நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய போதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கலாம். ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப் பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது முதலீட்டை ஈர்க்கவா ? அல்லது முதலீடு செய்யவா ? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும். சென்னை, திருச்சியில் உள்ள நிறுவனத்தை ஸ்பெயினுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டியதன் அவசியம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தை ஸ்பெயினுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டியதன் அவசியம் என்ன? என்று மக்களிடையை சந்தேகம் உள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். ஊழல் பணத்தை முதலீடு செய்ய வெளிநாட்டுக்கு பயணம் என மக்கள் சந்தேகப்படுகின்றனர்"
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.