”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” - உச்ச நீதிமன்றம்..!
உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று தாக்கியது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஊரடங்கு உத்தரவுகள், மாஸ்க் அணிதல் போன்ற நடவடைக்கைகளை எடுத்தன. இதனை தொடர்ந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டி படத்த கொரோனாவால் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இக்காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றினர். இதனால் பல மருத்துவர்கள் உயிரிழக்கவும் நேரிட்டது.
இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த மருத்துவர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய நிதியினை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள், கொரோனா காலத்தில் அரசு அறிவுறுத்தல் வழங்காத நிலையிலும், ஏராளமான மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதை நாம் என்றும் மறக்கவே கூடாது.
இந்த விவகாரத்தை பொருத்தவரை உரிய நிவாரணம் கேட்டு தனி நபர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனை தனிப்பட்ட ஒரு பிரச்சனையாக நாங்க அணுகப்போவதில்லை. மாறாக ஒட்டுமொத்தமாக மருத்துவ சேவைக்கான பொது பிரச்சனையாக தான் அணுக போகிறோம்.
எனவே இது தொடர்பாக விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், மருத்துவர்களை நாம் பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது எனவும் கருத்து தெரிவித்தனர்.