ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கண்காணிப்பு குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரணையை தொடர கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், இந்த வழக்கை காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “இந்த வழக்கு அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும்தான் இதில் உள்ள உண்மை வெளிவரும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சி.பி.ஐ நடத்தும் புலன் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ அதே போல தனது கணவர் கொலை வழக்கிலும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” எனவும் அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.