“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பான முறையில் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆய்வு செய்தோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவிலான பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவர்களது பயணம் சிறப்பான முறையில் அமையும் என நம்புகிறோம்.
இதையும் படியுங்கள் : ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் - டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!
முன்பதிவானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கோயம்பேடு மட்டுமல்லாமல் தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக தற்காலிக பேருந்து நிலையம் அமைத்துள்ளோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாகவே பேருந்துகள் தாமதமாக செல்கின்றன. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று தெரிவித்தார்.