"ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்.." - தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
”இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது ஓட்டுரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதற்கு ஓட்டுரிமை முக்கியமாகும். நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம். இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர்.. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நம்மிடம் படிவத்தை கொடுப்பார்கள். அதனை நாம் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிடும்.
அதில் நம் பெயர் இருக்க வேண்டும். பெயர் இருந்தால்தான் நம்மால் ஓட்டு போட வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் குழப்பங்கள் உள்ளன. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்க முடியுமா? வேலைக்கு செல்வோருக்கு இந்த படிவம் கொடுக்க முடியுமா? தவெகவை சேர்ந்தவர்களுக்கு இந்த விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை என்று தகவல் வருகிறது. இதனால்தான் நாங்கள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறோம். இதனால் பாதிக்கப்படுவது ஏழைகளும், உழைப்பாளர்களும்தான்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
உங்களுக்கு படிவம் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைன் மூலமாக படிவம் பூர்த்தி செய்ய முடியும். வரும் தேர்தலில் ஜென் இசட் வாக்காளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். உங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்குவதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். வரும் தேர்தலில் நாம் யார், நம் பலம் என்ன என காட்ட வேண்டும். அந்த பலமான ஆயுதம் ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.
தமிழ்நாடே வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்து, தமிழ்நாடு தவெக-வா? அல்லது தவெகதான் தமிழ்நாடா? என்பதுபோல் இருக்க வேண்டும். ஓட்டு என்று ஒன்று இருந்தால்தான் நாட்டை காக்க முடியும். உஷாராக, நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.