ஜம்மு - காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து - இழப்பீடு அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீரின் நெளகாம் காவல் நிலையத்தில் நேற்று (நவ. 14) நள்ளிரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காவல் நிலைய வளாகம் கடும் சேதமடைந்தது. மேலும், அந்தக் கட்டடத்தைச் சுற்றியுள்ள பிற கட்டடங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகள் வெடித்து சிதறியதே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. தொடர்ந்து, இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சேதமடைந்த கட்டுமானங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.