அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3வது போட்டியில் 435 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது. இந்த இமாலய இலக்கிற்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகாவின் பார்ட்னர்ஷிப் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.
இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 80 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரியுடன் சேர்த்து 7 சிக்கர்களை விளாசி மொத்தம் 135 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் அவர் 70 பந்துகளில் சதம் அடித்திருந்த நிலையில், ஒரு நாள் போட்டியில் அதிக வேக சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுரின் 87 பந்துகளில் சதம் அடித்திருந்த சாதனையை முறியடித்து ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுக்கு இது 10வது சதம் என்பதால் ஆசியாவில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து அணியின் டாமி பேமோட்டின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா வீராங்கனை மெக் லானிக் 15 சதங்களுடன் முதலிடத்திலும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.