#SLvsBAN : வங்கதேச அணிக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை அணி!
இலங்கை அணி அதிரடியாக விளையாடி வங்கதேச அணிக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக பதும் நிசங்கா களமிறங்கினார். அவர் 41 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
குசால் பெரேரா 4 ரன்களிலும், கேப்டன் குசால் மெண்டிஸ் 19 ரன்களிலும் நடையைக் கட்டினர். பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமா 41 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்த உதவினார். மறுபக்கம் சரித் அசலங்கா நிதானமாக விளையாடி பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் அதிரடியாக ஆடி சதம் பதிவு செய்தார். 105 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 108 ரன்கள் எடுத்திருந்தபோது தன்ஸிம் பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனார்.
முன்னதாக, உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னரே முக்கிய வீரர்களின் காயம் இலங்கை அணிக்கு பெரும் தலைவலியாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் தெளிவாகவே அது தெரிந்ததது. பேட்டிங்கில் ஜொலித்தால் பவுலிங்கில் சொதப்பல், பவுலிங்கில் கலக்கினால் பேட்டிங்கில் சொதப்பல் என்றே உலகக் கோப்பை தொடர் முழுவதும் விளையாடி வந்துள்ளது.