வாடகைக்கு வீடெடுத்து கட்டு கட்டாக கள்ள நோட்டு அச்சடிப்பு... 6 பேர் கைது!
ஆந்திராவில் வாடகைக்கு வீடு எடுத்து, கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள, பட்டுபுரம் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த 10க்கும் மேற்பட்டோர், அந்த வீட்டில் கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அதை புழக்கத்தில் விட்டு வந்தனர். இதற்கு தேவையான கள்ள நோட்டு தாள்களை ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளனர். இவ்வாறு 57 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
பின்னர் மக்களிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் திருப்பி தரப்படும் என்றும், அந்த 5 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு வாங்குபவர்களுக்கு மெடல் ஒன்று பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்து அதை புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 57 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகளையும், ஜெராக்ஸ் இயந்திரம் உட்பட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.
மேலும் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட குற்றச்சாட்டில், குற்றத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட பலர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- - குணசேகர்.ம