”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - செல்வபெருந்தகை பேட்டி
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதில் 1,14,40,000 கையெழுத்துகள் பெறப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஸ் ஐ ஆர் நடைமுறைப்படுத்துவதற்காக பல அலுவலர்கள் அனுப்பப்படுகிறார்கள். குறுகிய காலத்தில் இதனை நடத்த வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக வருவாய்த்துறையை சார்ந்த அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய எஸ்.ஐ.ஆர் என்பது வேறு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட எஸ் ஐ ஆர் என்பது ஒரு ஆண்டு காலமாக நடத்தப்பட்டது. குறுகிய காலத்தில் எஸ் ஐ ஆர் நடத்துவது என்பது ஏற்க முடியாது. காங்கிரஸ் காலத்தில் நடந்த எஸ்.ஐ.ஆர் விவரங்களை நீக்கி இருக்கிறார்கள் அந்த விவரங்களை ஏன் வைக்கவில்லை?. நியாயமான முறையில் நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் நடவடிக்கையை செயல்படுத்துகிறது என்றால் இதற்கு முந்தைய பழைய விவரங்களை இணைய தளத்தில் அவர்கள் வைத்திருக்க வேண்டும் ஆனால் அவை முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள எஸ்.ஐ.ஆர் என்பது மறைமுகமான ஒரு NRC நடவடிக்கையாகும். பாஜகவுக்கு யாரெல்லாம் வாக்களிப்பார்களோ அவர்களுக்கு சாதகமாக வாக்குரிமையை கொடுப்பார்கள். இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினரின் வாக்குரிமை நீக்குவதற்காக குறி வைத்து வேலை செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்களை இன்னலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே எஸ்.ஐ.ஆர் கொண்டுவரப்பட்டுள்ளது தற்போது தமிழ்நாட்டில் பருவ மழை காலம் வந்துள்ளது, அதன் பின்பாக தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. எனவே தேர்தல் முடிந்த பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. அவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய அடையாள அட்டையை வைத்து எங்கு வேண்டுமானாலும் வாக்கு செலுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு செயலாகும். இந்த நடவடிக்கையை தடுக்க உச்ச நீதிமன்றத்தாலேயே முடியும்” என தெரிவித்தார்.