“அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழிகளை கற்க கூடாதா?” - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு ப்ளாக்மெயில் செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இன்னும் எத்தனை காலத்திற்கு காலாவதியான கொள்கையை தமிழ்நாடு மக்கள் மீது திணிப்பீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
“முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்நாடு அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? தற்போது 2025ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.