துண்டிக்கப்பட்ட தலையுடன் உலா வந்த நபரால் அதிர்ச்சி - பின்னணி என்ன?
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஒருவர் துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலையுடனும், ரத்தம் படிந்த ஆயுதத்துடன் தெருக்களில் இன்று(மே.31) உலா வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், “சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒரு நபர் உலாவியதாவும் அவரை ஒருவர் வீடியோ எடுத்ததாகவும் தகவல் கொடுத்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் துண்டிக்கப்பட்ட தலையுடன் தானாகவே காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
தொடர்ந்து, பெண்ணின் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஆயுதத்தை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் கொலை செய்தவருக்கு அந்த பெண் உறவுக்கார பெண்(மைத்துனி) என்றும் இருவரும் சொத்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இக்கொடூர சம்பவம் நேர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.