மாற்றுத்திறனாளிகள் பயனாளியாக மட்டும் இல்லாமல் மக்கள் பிரதிநிதியாகவும் மாறப்போகிறீர்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,
”திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர். தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மட்டும் இதுவரை 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறி மாற்றுத்திறனாளிகள் மனுக்களை மட்டும் அளிக்காமல் இனி மனுக்களை பெறப்போகிறீர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் .
கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது. சக்கர நாற்காலியில் பம்பரம் போல் சுழன்று உழைத்தவர் கலைஞர் கருணாநிதி” என்றார்.