For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்: அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

02:54 PM Feb 28, 2024 IST | Web Editor
இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்  அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி
Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தமிழரான சாந்தன் (52) கடந்த ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனிடையே கடந்த பிப். 23-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மத்திய அரசு அனுமதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (பிப். 28) அதிகாலையில் சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அறிவித்தார்.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்தனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். மேலும், சாந்தனின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில், மறைந்த சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "கடந்த 2022 விடுதலையான 4 பேரும் தங்களுடைய தாயகத்துக்கு திரும்பவில்லை. சிறையில் இருந்து விடுதலை பெற்றாலும் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார்கள். சிறப்பு முகாம் என்ற பெயரில் எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்தில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகிய நால்வரும் அடைக்கப்பட்டனர். சாந்தன் தன்னுடைய தாயகத்திற்கு உயிருடன் திரும்ப வேண்டும் என போராடி வந்தார். 

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அவர் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது. சாந்தனுடைய உடலை ஈழத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அவர்களுடைய உறவினர்கள் இங்கு வந்துள்ளார்கள். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதியுள்ள மூவரையும் அவரவர் விரும்புகின்ற பகுதிகளில் தங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்கள். அது போலவே மீதமுள்ளவர்களையும் உடனடியாக தங்கள் குடும்பத்தினரோடு இருக்கக் உத்தரவு தர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும், தேச நலன் கருதுகிரோம் என்ற பெயரில் சிறப்பு முகாமில் வைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது” என தெரிவித்தார்.தொடர்ந்து, மறைந்த சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் கூறியதாவது, “33 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சட்ட போராட்டம், பயணம் சாந்தன் மறைவை பார்க்கவா?. விடுதலை விடுதலை என்று போராடி சாந்தனுடைய மறைவை தான் பார்த்துள்ளோம். பொதுசிறையில் இருந்து திருப்பி கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதற்காகவா அவர்கள் போராடினார்கள். சாந்தனுடைய கடைசி விருப்பம் அவரது தாயை பார்க்க வேண்டும் என்பது. அதைக் கூட நிறைவேற்றவில்லை.

சாந்தனுடைய இறப்பு திரைப்படங்களில் வரக் கூடிய உச்சகட்ட காட்சியைப் போல உள்ளது. இன்று இரவு விடுதலையாக கூடிய நிலையில் இன்று காலையில் இறந்துள்ளார். இது மரணம் இல்லை, சட்டக் கொலை. மீதி இருக்கும் மூன்று பேரையும் இந்த நிலைக்கு தள்ளாமல் அவரவர் விரும்பிய நாட்டுக்கு விரைவில் அனுப்ப வேண்டும். திருச்சி சிறையில் அகதிகளாக இருக்கக்கூடிய ஜெயக்குமாரை விரைவில் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்ப அவருடைய மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமுறையை தாண்டி தண்டனைகளை அனுபவித்துள்ளார்கள். சாந்தன் 24 மணி நேரமும் பூஜை, சாமி என்ற நம்பிக்கையில் இருந்தவர். அவருக்கு வாழ வேண்டும் என்று ஆசை. சாந்தன் தனிமையில் இருக்கக் கூடிய காரணத்தினால் பயந்து கொண்டே திசு சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. மீதி உள்ளவர்களையாவது உயிரோடு அனுப்ப வேண்டும். 

தமிழ்நாடு அரசு சாந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இடம் ஒதுக்க வேண்டும். இறுதி அஞ்சலி செலுத்த குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மறைந்த சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஈழத் தமிழர்களின் வாழ்வில் துன்பமும், துயரமும், மரணமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. சாந்தன் சிறையில் இருந்த போது வருத்தப்படாதீர்கள் என எனக்கு தைரியம் சொன்னவர். 32 ஆண்டுகள் தமிழ்நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் வாடி வதங்கியவர் சாந்தன். அவர் தலை சிறந்த எழுத்தாளர், கேப்டன் பிரபாகரணின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

முருகன், ஜெயக்குமார், ராபர்ட், பயாஸ் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுவித்து எந்த நாட்டிற்கு போக வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த நாடுகளுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் வாழ்க்கையின் வசந்தம் எதையும் பார்க்கவில்லை. சாந்தனுடைய தாயார் என்ன பாடுபட்டு கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை?

எந்தவித குற்றமும் செய்யாமல் நிரபராதிகளாகிய நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள். என்றைக்கும் தமிழீழ வரலாற்றில் சாந்தனுடைய பெயர் இருக்கும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலை காண நளினி வருகை தந்தார். சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement