பாலியல் வன்கொடுமை - தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்!
தெலங்கானாவில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து மேட்சலுக்கு செல்லும் MMTS ரயிலில் 23 வயது இளம் பெண் ஒருவர் பெண்கள் பெட்டியில் பயணித்தார். அவருடன் மேலும் இரண்டு பெண்கள் பயணித்துள்ளனர். அந்த இரண்டு பெண்களும் அல்வால் ரயில் நிலையத்தில் இறங்க, அந்தப் பெண் மட்டும் தனியாக பயணித்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது, அந்த நபரிடம் இருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். குண்ட்லா போச்சம்பள்ளி ரயில் நிலையம் அருகே விழுந்து, படுகாயத்துடன் இருந்தவர்கள் அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் மேட்சலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அனந்தபூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் சம்பவம் நடந்த நாளில் தனது மொபைலை பழுதுபார்ப்பதற்காக செகந்திராபாத்திற்குச் சென்றார் என்பதும் தெரிய வந்தது. மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரை அடையாளம் காண முடியும் என்று அந்தப் பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இது குறித்து செகந்திராபாத் ஜிஆர்பி இன்ஸ்பெக்டர் சாய் ஈஸ்வர் கவுட் செய்தியாளர்களிடம், இச்சம்பவம் தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.