தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு அவை முனைவர் துரைமுருகன், கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதனால் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.