“செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டு, அமைச்சர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்” - அண்ணாமலை பேட்டி!
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினசரி போனில் பேசி, அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு திரைக்கதை வசனம் எழுதி வருவதாக பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் பிரசாரம் மேர்கொண்ட பாஜக கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது சம்பந்தமாக சதியால் அவரது பெயர் சொல்லப்படுகிறது. தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரே சொல்லிய பிறகு இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது தீர விசாரித்து எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்னை இல்லை என்று தனிப்பட்ட முறையில் அவர் கூறிய பிறகும் எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
கிராமப்புற சிறுவர்களை குறி வைத்து தாய் கிராமங்களில் கேலோ இந்தியா மைதானத்தை அமைக்க பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த சூழலில் கோவையில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். குழந்தைகள் விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருக்கும் சூழலில் கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கமளிப்பதற்காக திமுக முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனை முறை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார்?என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்வார், பெருநகரங்களுக்கு செல்வார் ஆனால் கிராமங்களுக்கு செல்லமாட்டார். கோவை மக்களவைத் தொகுதியில் பல்லடம், சூலூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் மிக முக்கியமான பிரச்னைகள் இருக்கக்கூடிய பகுதிகள். அவர்களது முக்கிய கோரிக்கையாக விசைத்தறி, நீர் மேலாண்மை போன்றவை இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினசரி போனில் பேசுகிறார். டிஆர்பி ராஜாவிற்கு அவர்தான் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார். என்னதான் திதைக்கதை வசனம் எழுதி அதை இங்கு அமைச்சரும் வேட்பாளரும் செய்தாலும் தங்க சுரங்கத்தையே இங்கு கொட்டினாலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
என்னை பொறுத்தவரை சிறுபான்மை பெரும்பான்மை என்று இல்லை. 3 ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக இப்தார் நோன்பு திறந்து கொண்டிருக்கிறேன். சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறேன். நேற்று முன் தினம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காலியாக இருந்த பிரச்சார வாகனத்தை அதிமுகவினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர் உள்ளே இருக்கிறாரா? இல்லையா? என்பதை கூட தெரியாமல் அவர்கள் மறியல் செய்தார்கள். அந்த அளவிற்கு தான் அவர்களது புத்தி இருக்கிறது”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.