கோவையில் சீனியர் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - தாக்குதலில் ஈடுபட்ட 13 மாணவர்கள் விசாரணைக்காக பெற்றோருடன் ஆஜர்!
கோவை மாவட்டம் மநுக்கரை அருகே திருமலையாம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது நேரு கல்வி குழுமம். இந்த வளாகத்தில் தொழில் நுட்ப கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களும், மாணவர்
விடுதியும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொறியியல் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதி அறையில் இருந்து பணம் திருட்டு போனதாக கூறி, கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ கிரிமினாலஜி படிக்கும் சீனியர் மாணவர் ஹதி என்பவரை, பொறியியல் படிக்கும் மாணவர்கள் தாக்கினர்.
சீனியர் மாணவர் கையெடுத்து கும்பிட்டும் விடாத ஜூனியர் மாணவர்கள், முட்டி போட வைத்து கையை மேல தூக்க சொல்லி அடித்து சித்திரவதை செய்தனர். இதை வீடியோவாகவும் பதிவு செய்த நிலையில் இந்த காட்சிகள் கல்லூரியல் பரவியது. இதனையடுத்து அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நேரு கல்லூரி நிர்வாகம் பொறியியல் படிக்கும் மாணவர்கள் 13 பேரை விடுதியை விட்டு சஸ்பென்ட் செய்தது. மேலும் கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் புகாரும் அளித்தது.
விடுதியில் தங்கி படிக்கும் பொறியியல் மாணவர்கள் ஷியாம், திருச்செல்வம்,
பரத்குமார் ,அபிஷேக், திலீபன் , ராகுல், லோகேஸ்வரன், நீலகண்டன், அதாஅலிப்,
ஹேம்நாத், ஈஸ்வர், சபரிநாதன், சக்தி முகேஷ் ஆகிய 13 மாணவர்களை பெற்றொருடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் விசாரணைக்காக 13 மாணவர்களும் பெற்றொருடன் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக கல்லூரி விசாரணை குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதி வளாகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. கல்லூரி விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.