மு.க.முத்துவின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் கலைஞரின் மூத்த மகனும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரருமான மு.க.முத்து மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மு.க.முத்து தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க.முத்து. பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், திமுக உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதலமைச்சருக்கும், குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.