தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்...!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று பெரும்பழியைச் சுமத்தியுள்ளது இனவெறி பாகுபாட்டின் உச்சமாகும். பிரதமர் மோடி தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக வெளியான காணொளிகள் அனைத்தும் பொய்யானது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது பிரதமர் மோடிக்கு தெரியாதா? உங்கள் கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அனுப்பிய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் அப்படி எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது தெரியாதா? அப்போலி காணொளிகளைப் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியாதா? பீகார் சட்டமன்றத்திலேயே அவை போலிக் காணொளிகள் என்று ஒப்புக்கொண்டதுதான் பிரதமருக்கு தெரியாதா? அவையெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு அவதூறை பிரதமர் மோடி பரப்புவது தமிழர் விரோதப்போக்கன்றி வேறென்ன? உண்மையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதில்லை. பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியுமா? தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா? கலவரம் செய்தவர்களைக் கட்டுப்படுத்தச் சென்ற தமிழ்நாடு காவல்துறையினரையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கினர் என்பதாவது பிரதமருக்கு தெரியுமா? அப்போதெல்லாம் பிகாரிகள் தமிழர்களைத் தாக்குகின்றனர் என்று பேசாத பிரதமர் மோடி, வடவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் வன்முறைகள் தவறு என்று பேசாத பிரதமர் மோடி, தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற ஒரு பச்சை பொய்யைக் கூறுவது எதனால்? அற்ப தேர்தல் வெற்றிக்குத்தானே?
தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பிரதமர் பெருமையாகப் பேசுவது தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் தந்திரம் என்பது மீண்டும் தெளிவாகிறது. இதிலிருந்து இந்திய நாடும், பிரதமரும், அரசும், ஆட்சியாளர்களும் இந்தி பேசும் மக்களுக்கானது மட்டுமே என்பதும், தமிழர்கள் இந்நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது. ஆகவே, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் ஒடிசா தேர்தலுக்காக தமிழர்களைத் திருடர்களாகவும், பீகார் தேர்தலுக்காக தமிழர்களை வன்முறையாளர்களாகவும் கட்டமைக்கும் பாஜகவுக்கு வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
 
  
  
  
  
  
 