தமிழ்நாட்டின் "தோழி விடுதி"யை போல் நாடு முழுவதும் சாவித்ரிபாய் புலே விடுதிகள் - காங்கிரஸ் அறிவிப்பு
மக்களவை தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 2 கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ‘மகளிர் நீதி உத்தரவாதம்’ என்ற தலைப்பின்கீழ் பெண்களுக்கான 5 அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
1. மகாலக்ஷ்மி உத்தரவாதம்
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
2. பாதி மக்கள்தொகை - முழு உரிமைகள்
மத்திய அரசின் புதிய நியமனங்களில் பெண்களுக்கு பாதி உரிமை கிடைக்கும்.
3. அதிகாரத்திற்கு மரியாதை
அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு திட்டப் பணியாளர்களின் மாதச் சம்பளத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
4. சரியான நட்பு
பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை வழங்கவும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சட்ட உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
5. சாவித்ரிபாய் புலே விடுதி
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பணிபுரியும் மகளிருக்கான விடுதி உருவாக்கப்படும். மேலும் இந்த விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இதற்கு முன் ‘உழவர் நீதி’, ‘இளைஞர் நீதி’ உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் உத்தரவாதங்களை அறிவித்துள்ளோம். இன்று ‘மகளிர் நீதி’ என்ற தலைப்பில் உத்தரவாதங்களை அறிவித்துள்ளோம். எங்களின் உத்தரவாதங்கள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகள் அல்ல.
1926-ல் இருந்து இன்று வரை, பல்வேறு அறிக்கைகளை உருவாக்கி, அந்த அறிவிப்புகளை நிறைவேற்றி வருவது காங்கிரஸ் கட்சியின் சாதனை. மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து அளித்து, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் எங்கள் கரத்தை வலுப்படுத்துங்கள்” என்று தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.