ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் - ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு!
தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 1975-ம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது. இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 என்ற தனது செயற்கைக் கோள் வழியாக எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அதில், ராமர் பாலம் அல்லது ராம சேது என்றும் அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேஸ்வரம் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு இடையே அமைந்துள்ளது. இந்த பாலம் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கு) வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து (வடக்கில்) பிரிக்கிறது.
இந்த பாலம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் 15ம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது எனவும், பின்னர் அது பல ஆண்டுகளாக புயல்களால் படிப்படியாக அரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னார் தீவு சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலைப் பாலம் மற்றும் ரயில் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர் பக்கத்தில், ராமேஸ்வரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.
📸 Check out our #WeekInImages 17-21 June 2024 👉 https://t.co/0Y6huKpW9S pic.twitter.com/0KaaOMu5vB
— European Space Agency (@esa) June 23, 2024
இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கிகரிக்கப்பட்டது. இந்த கடல் 1 முதல் 10 மீ. ஆழம் மட்டுமே கொண்டது. இங்குள்ள நிலப்பரப்பு பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும், ஏராளமான மீன்கள், கடல் பசு, டால்பின் மற்றும் கடல் புற்கள் ஆகியவை ஆழமற்ற நீரில் செழித்து வளரக்கூடிய இடமாகவும் உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் என்று தனது இணையதளத்தில் (https://www.esa.int) தெரிவித்துள்ளது.
ராமர் பாலம் என்று சொல்லப்படும் இந்தப் பகுதி எப்படி உருவானது என பல கோட்பாடுகள் கூறப்படுகின்றன. புவியியல் சான்றுகள் அடிப்படையில், இந்தப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலப்பகுதியின் எச்சங்கள் எனக் கூறப்படுகிறது.