“தமிழைவிட பழமையான மொழி சமஸ்கிருதம்” - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேச்சு!
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச்.10) நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழைவிட பழமையான மொழி சமஸ்கிருதம் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அவையில் நிஷிகாந்த் துபே பேசியதாவது “திமுக அரசு எப்போதும் தமிழ் மிகவும் பழமையான மொழி என்பார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. கர்நாடகம், தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழியாக இருப்பது சமஸ்கிருதம்தான்.
தேர்தலுக்காக கல்விக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கிறார்கள்.காங்கிரஸுடன் இணைந்து செயல்படும் திமுக, நாட்டின் அடிப்படையை தகர்க்க விரும்புகிறது. ஆங்கிலத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை அவர்கள் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல, உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும்”
இவ்வாறு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.