வாகனத்தை முந்திச் சென்ற தூய்மைப்பணியாளர்...நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீசார்!
மத்தியப் பிரதேசத்தில் தங்களின் வாகனத்தை முந்திச் சென்றவரை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கஜூரஹோ நகரைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 18ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வழியில் காவல்துறை மற்றும் மின்சாரத் துறையினரின் வாகனங்களை முந்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, அவரை நிறுத்திய காவல்துறையினர் வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டியதாகக் குற்றம்சாட்டி அவரை தாகத வார்த்தைகளில் பேசியுள்ளனர். மேலும், அவர் மீது தாக்குதல் நடத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமல்லாமல், காவல்நிலையத்தில் வைத்து ரோஹித் வால்மீகியை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இதனால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ரோஹித் தனது வீட்டிற்குத் திரும்பியவுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
கடந்த 20ம் தேதி தன்இதனையடுத்து, தன்னைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். இது குறித்து பேசிய சத்தர்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின், “இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டக் காவலர்களின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்கக் கூடாது என்பதால் அவர்களை காவல்நிலையத்தை விட்டு நீக்கியுள்ளோம். சம்பந்தபட்ட நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.