சனாதன சர்ச்சை.... மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!
சனாதனம் குறித்து பாஜக தற்போது மீண்டும் விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களை ஒழிப்பது போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது 153, 295 ஆகிய சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த சர்ச்சை கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வரை தொடர்ந்து நீடித்தது. அதன்பிறகு சனாதன சர்ச்சை சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மீண்டும் சனாதன சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதனை ஒட்டி பாஜகவின் X தள பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய இந்தி மொழி பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ராமர் கோயிலை வெறுக்கிறவர்களையும், சனாதன தர்மத்தை அவமதிப்பவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தி தெரியாது போடா என பொறிக்கப்பட்டுள்ள டிசர்ட்டுடன் கூடிய தனது புகைப்படத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.