#SambhalViolence | கொல்லப்பட்ட 5பேர் மீது துப்பாக்கியை பிரயோகித்தது யார்?- நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு!
உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் கிபி 1526முதல் ஷாஹி ஜமா பள்ளிவாசல் அமைந்துள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் இந்து கோவிலை இடித்து இந்த கட்டியிருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனவே, அந்த இடத்தில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிவாசலை ஆய்வு செய்யக் குழு அமைத்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆய்வுகுழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 24ம் தேதி காலை பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்தனர். அப்போது ஏராளமானோர் அங்கு கூடி அந்த ஆய்வுக்குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவாறு முழக்கமிட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்ட போதும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
இதையும் படியுங்கள் : இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் புரூஸ் லீ… பிறந்தநாள் பகிர்வு!
இந்த வன்முறை சம்பவத்தில் நயீம், பிலால், நௌமன், முகமது கைஃப் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் பிஆர்ஓ ஒருவர் காலில் படுகாயமடைந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில், அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர். முழு ஆய்வு நடவடிக்கைகளும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளன., இந்த குழு தனது அறிக்கையை வரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. பள்ளிவாசலை ஆய்வுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னர், கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக 7 பேர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதையடுத்து, அப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, காவல்துறையினரின் வன்முறையில் உயிரிழந்த 18 வயதான முகமது கைஃப் -யின் தாய் அனீஷா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
"தனது மகன் முகமது கைஃப் சந்தையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். வன்முறை நடந்த அன்று காலை வழக்கம் போல் சந்தைக்கு சென்றார். அப்போது தான் அவரை கடைசியாக பார்த்தேன். சம்பல் பகுதியில் நடந்த வன்முறை பற்றி தகவல் அறிந்ததும், தனது மகனை தேடிப் புறப்பட்டேன். என் கண் முன்னே தனது மகனை காவல்துறையினர் அடித்தனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஐந்து பேரின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துப்பாக்கியை பிரயோகித்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.