சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை - அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் வெள்ளக்கரை மேல் தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ்(38). இவர் சிதம்பரத்தில் உள்ள காசி மட தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காளிதாஸ் கடைக்குள் இருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் நகர போலீசார் காளிதாசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காளிதாசின் உறவினரான புதுச்சேரியைச் சேர்ந்த மணி(22) என்பவர், காளிதாசின் அண்ணன் மகளை காதலித்ததாகவும், இதை தெரிந்து கொண்ட காளிதாஸ் மணியை அழைத்து கண்டித்ததாகவும், அந்த கோபத்தில் மணி இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்து காளிதாசை வெட்டிக் கொலை செய்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் கொலைக்கான முழு காரணம் என்ன? வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.