ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! - அமைச்சர் உதயநிதி
ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மௌலிவாக்கம், பரணிப்புதூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மெளலிவாக்கம் பகுதியில் நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இன்னும் 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதியானது வழங்கப்படும் என கூறினார். சில இடங்களில் நியாய விலைக் கடைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அவற்றை சீர் செய்து, டோக்கன் விநியோகித்து அதன்பின் நிதி வழங்கப்படும்.
திருப்புகழ் IAS அறிக்கையின்படி மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பெற்றதால் தான் 3
நாட்களில் வெள்ளம் வடிந்துள்ளது. மின் விநியோகம் சீரடைந்துள்ளது. இல்லையென்றால்
நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கக்கூடும்.
இதையும் படியுங்கள் : “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இறைவனே முடிவெடுப்பான்..!” - சரத்குமார் பேட்டி
மத்திய குழு சென்னை வந்திருந்த போது, எவ்வளவு பெரும் சேதம், எவ்வளவு பெரிய வெள்ளம் என கூறியிருந்தனர். சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் 80% மழைநீர் வடிந்துவிட்டது. இன்னும் 10 முதல் 20 சதவிகித மழைநீர் மட்டுமே ஒரு சில இடங்களில் வடிய வேண்டியுள்ளது. அதற்காக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் என எல்லோரும் பணி செய்து வருகிறார்கள். இது பெரிய பாதிப்பு என்பதால் மக்கள் சிலருக்கு அதிருப்தி இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக இந்த இடர்பாட்டில் இருந்து வெளியேறுவோம்.
தற்போது சென்னையில் உள்ள நிலைமையில் கார் பந்தயம் வேண்டாம் என ஒத்திவைத்துள்ளோம். கார் பந்தயம் நடத்துவதற்கான தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.