ரூ.525 கோடி நிதி மோசடி வழக்கு: தேவநாதன் கைது!
ரூ.525 கோடி நிதி மோசடி வழக்கில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன், மயிலாப்பூர் இந்து சரசுவதி நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இவர், அதிக வட்டி தருவதாக கூறி பல நபர்களை ஏமாற்றியதாக கூறி, பலர் அந்நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 140-க்கும் மேற்பட்ட புகார்களும் தேவநாதனுக்கு எதிராக, கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் இன்று (ஆக. 13) கைது செய்யப்பட்டார். தேவநாதனை, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், திருச்சியில் வைத்து கைது செய்தனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் , பாஜக சார்பில் தேவநாதன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஏற்கனவே ஆருத்ரா நிதி மோசடியில், பாஜக கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தற்போது, வேறொரு நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.