சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் இறுதியில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகவும் பேரழிவுகள் ஏற்பட்டன. குறிப்பாக இரு பாதிப்புகளில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் முழுமையாகவும் ஒரு பகுதியாகவும் சேதமடைந்தன.
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்கவும், புதிதாக கட்டவும் தமிழ்நாடு அரசு ரூ.382 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, 4,577 புதிய வீடுகள் கட்ட 199 கோடி ரூபாயும், 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகளை மேற்கொள்ள 182 கோடி என்று மொத்தம் 382 ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வரை வழங்கிடவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நிதி ஒதுக்கீடு செய்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தற்போது வெளியிட்டிருக்கிறது ஊரக வளர்ச்சி துறை.