மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.3,000 | சுங்கச்சாவடிகளுக்கு NO | -வெளியானது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
அதிமுகவைப் பொறுத்த அளவில், 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க இன்று சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கைகள் குறித்த விவரங்களும் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
- மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
- நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை.
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
- குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
- தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.