For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

02:10 PM Dec 03, 2024 IST | Web Editor
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2000 நிவாரணம்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

” நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது

அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் துறைசார்ந்த அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்றும் நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில், இன்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.

பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.

நிவாரண உதவிகள் :

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் நிவாரணம்
  • சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 ஆயிரம் நிவாரணம்
  • முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • மழையினால் 33% மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33% மற்றும் அதற்கு மேலாக சேதமுற்றிருப்பின் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கப்படும்
  • எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பிற்கு நிவாரணமாக ரூ.37,500 ஆக வழங்கப்படும்
  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பிற்கு நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்
  • விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2000 வழங்கப்படும்.
  • இதேபோல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags :
Advertisement