"ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் உரையாற்றினார்.
அப்போது, ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவரது உரையில், ”நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.