"ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” - காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு
ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸும், பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகள்:
- குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000
- 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ. 500க்கு சமையல் எரிவாயு
- கால்நடைகளின் சாணம் ரூ2-க்கு 1 கிலோ கொள்முதல்
- சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை ரூ. 50 லட்சமாக உயர்வு
- அரசு ஊழியர்களுக்காக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சட்டம்
- அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட்
- இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக ரூ15 லட்சம் இலவச காப்பீடு
மேலும் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள், 4 லட்சம் அரசு வேலைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் உள்ளிட்ட அமசங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.