பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000... வெற்றிப் பெற்றால் ரூ.2100 - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லியில் பெண்களுக்கான புதிய திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளிவந்துள்ளார். பல நிபந்தனைகளால் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அதிஷி டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது;
“டெல்லி மக்களுக்காக இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிட வந்துள்ளேன். இரண்டும் பெண்களுக்கானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 தருவதாக நான் முன்பு உறுதியளித்தேன். இன்று காலை அதிஷி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது இத்திட்டம் டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் இன்னும் 10 -15 தேதிகளில் அறிவிக்கப்படும். இதனால் தற்போது உங்கள் வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற முடியாது. சில பெண்கள் விலைவாசி உயர்வு காரணமாக ரூ.1000 போதாது என என்னிடம் கூறினார்கள். எனவே, பெண்களுக்கு மாதம் 2100 ரூபாய் கொடுக்கப்படும். இதற்காக பெண்கள் நாளையில் இருந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், அவர்களின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.